Monday, December 16, 2013

மன அழுத்தம் நீக்கும் திறந்த புத்தக தேர்வு முறை – சாவால்ளும் ஆலோசனையும்


கட்டாய இலவசக் கல்வி சட்டம் ,அதை  தொடர்ந்து தேர்வு முறைகளில் புதிய அணுகுமுறை என  மாற்றங்களை தந்து மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று என்று நிரூபித்திக் கொண்டு இருக்கும் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி இலாக்காவின் புதிய அறிவிப்பு  திறந்த புத்தக தேர்வு முறை ஆகும்.

சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தாண்டு பத்தாம் வகுப்பிலும் அடுத்தாண்டு முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளிலும் திறந்த புத்தக தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பல கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  
மனப்பாடம் செய்யும் முறைக்கு டாட்டா காட்டி, மாணவர்கள் தாம் கற்ற பாடங்களில் புரிந்து படித்துள்ளார்களா என்பதை சோதிக்கும் விதத்திலும் , அவர்கள் சிந்தித்து பதிலளித்து, உண்மையான திறமையை வெளிப்படுத்தும் விதத்திலும் இந்த திறந்த புத்தக தேர்வு முறை அமைந்து இருக்கும்.
பலர் நினைப்பது போல புத்தகத்தை தேர்வு அறைக்கு எடுத்துச் சென்று , புத்தகத்தை வைத்து எழுதுவது கிடையாது இந்த திறந்த புத்தக தேர்வு முறை.
பல மேலை நாடுகளில் கணினி மென்பொருள் மொழிகள், பொறியியல், அறிவியல், கணிதம் மற்றும் மொழிப்பாடங்கள் போன்றவற்றிற்கு  திறந்த புத்தக தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. அதுவும் புத்தகம் கொண்டு எழுதும் தேர்வுகள் , புத்தகத்தை அப்படியே பார்த்து எழுதுவதாக அமையாது. புத்தகங்கள் உதவியுடன் , குறிப்புகள் கொண்டு வீட்டிலேயே தேர்வு எழுதும் முறையில் , நேரக் கணக்கு (time limited) உண்டு. இவை அவ்வாறு எழுதும் போது யாருடனும் கலந்து ஆலோசிக்காமலும் , பிறருடன் கலந்து ஆலோசித்தும் (Can discuss with others), ஆனால் பதிலை தானாக எழுதுவதாகவும் அமையும். இப்போது சிபிஎஸ்சி கொண்டு வந்துள்ள திறந்த புத்தக தேர்வு புத்தகங்கள் கொண்டு, குறிப்பு எடுத்து வகுப்பில் எழுதும் தேர்வாக , நேரக் கணக்குடன் இருக்கும்.
சிபிஎஸ்சி கொண்டு வந்துள்ள தேர்வு முறை Pre-Announced Test (PAT) ஆகும். நான்கு மாதங்களுக்கு முன்பே தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, வகுப்பறையில் புத்தக உதவியுடன் எழுதுவாதாக அமையும் . தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை, நேரடியாக புத்தகத்தை பார்த்து எழுதுவதாக அமையாமல், அவை மாணவனின் உயர் சிந்தனை திறனை சோதிப்பதாக அமையும்.  

திறந்த புத்தக தேர்வு முறையை பொருத்தவரை மாணவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1.இந்த தேர்வு தாங்கள் படித்த விசயத்தை நினைவு படுத்துவதாகவோ , தங்களின் மனப்பாட திறனை சோதிப்பதாக அமையாது. தாங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடம் சார்ந்த திறனை புதிய சூழலில் பொருத்திப் பார்ப்பதாகவும், பிற சூழலுடன் ஒப்பிட்டு பார்பதாகவும், தாங்கள் கற்றதை ஒரு ஆதாரமாக பயன்படுத்துவதாகவும் தேர்வுகள் அமையலாம்.

2. தேர்வுக்கு தயாராக வேண்டிய அவசியமில்லை என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் தேர்வை எழுதி முடிக்க வேண்டி உள்ளதால், தேர்வுக்குரிய பாடப்பகுதிகளை நன்கு படித்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குறிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். அப்போது  தான் தேர்வுகளில் பதிலளிக்கும் போது தேவையான விவரங்களை வழங்கவும், உதாரணங்களை எடுத்துரைக்கவும், உங்கள் விவாதத்திற்கு தேவையான புள்ளிவிபரங்களை வழங்கவும் எளிதாக அமையும்.

3. தேர்வுக்கான தயாரிப்புகள் தற்போதைய தகவல்களுடன் ஒத்து போவதாக அமைந்திருத்தல் அவசியம். புத்தகத்தை படித்து , குறிப்புகளை சுருக்கமாகவும், நம்பிக்கையுடனும் , திட்டமிட்டும் தயாரித்து கொள்ளுங்கள். உங்களின் சொந்த கருத்துகளை எழுதுவதன் மூலமும், சரியான கேள்விகளை தேர்ந்தேடுத்து, எதிர்ப்பார்க்கும் பதில்களை ஆதாரங்களுடன் ,உங்களின் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெறலாம்.

4. தேர்வுக்கான கேள்விகள் எந்த மாதிரி அமையலாம் என மாதிரி வினாத்தாள்களை வாங்கி பாருங்கள். ஒருபோதும் மாதிரி வினாவிடைகளை படிக்காதீர்கள். அது உங்களின் சிந்தனைக்கு தடையாக அமையலாம். இது உயர் சிந்தனைத் திறனை சோதிப்பதற்கான தேர்வு என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.

5.  உங்கள் பதில்களில் முக்கியமானவைகளை கலர் பேனாவால் அடிக்கோடிடவும். மன வரைப்படம் (கான்சப்ட் மேப்) முடிந்தால் வரையலாம்.தலைப்புகள் ,உப தலைப்புகள், முக்கியமான தகவல்கள் ஆகியவற்றில் அடிக்கோடிடவும். இது எளிதாக மதிப்பிட உதவும். தங்களின் மேல் மதிப்பீட்டாளருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
  
6.  வினாத்தாளை முழுமையாக வாசிக்கவும். எந்த மாதிரியான பதிலை நம்மிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை முடிவு செய்யவும். கேட்கப்பட்ட கேள்விகளில் எவை மிகவும் எளிதானதாகவும் , அதற்கு தேவையான போதுமான அளவு பதில்களை அளிக்க முடியும் என்பதை முடிவு செய்து அதற்கான பதிலை எழுத ஆரம்பிக்கவும். இது நமக்கு நம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, தேவையில்ல பயத்தை பதட்டத்தை போக்க உதவியாக இருக்கும். காலக் கொடுவுக்குள் தேர்வினை எழுதி முடிக்கும் விதத்தில் வினாவுக்கான பதிலை குறிப்பிட்ட காலத்திற்குள் எழுதி முடிக்க முன்கூட்டியே தீர்மானிக்கவும். இது அதிக மதிப்பெண்ணை பெற்று தரும்.  
  
திறந்த புத்தக தேர்வு மாணவனுக்கு சிசிஇ மதிப்பீட்டு முறையில் மேலும் 20 மதிப்பெண்களை பெற்று தருவதாக அமைந்துள்ளது. திறன்கள் அடிப்படையில் மதிப்பிடப்படும் இந்த மதிப்பீட்டு முறை உண்மையான திறமையான மாணவர்களை அடையாளம் காட்டும். புரிந்து படிப்பதற்கு அடிப்படையாக அமையும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து , மாணவர்களின் உயர் சிந்தனை அறிவு திறனை சோதிக்கும் கேள்விகள் தயாரிக்க பயற்சிகள் வழங்கும் பட்சத்தில் , திறந்த புத்தக தேர்வு பாராட்ட தக்கதாக அமையும். விரைவில் தமிழகத்திலும் இம்முறையிலான மதிப்பீட்டை எதிர்ப்பாக்கலாம்.  

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை மிகவும் தேவை எங்களுக்கும்... நன்றி....

வாழ்த்துக்கள்...

Unknown said...


மாணலர்களின் தற்க்கொலை இருக்காது

Post a Comment