Tuesday, September 17, 2013

தி இந்து தமிழ்நாளிதழ் யாருக்கானது....!


எது இலக்கியம்? இந்த கேள்வி என்னை அடிக்கடி வாட்டி எடுக்கும் சாத்தனின் குரலாகவே கருதுகிறேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம். இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கும் வரமுடியவில்லை. இதற்காக,  நான் சமகாலத்தில் பழகி, எழுத்துலகில் சிறந்தவர் என சொல்லிக் கொள்ளும் பலரால்,  என்னையே ஆய்வுக்கு உட்படுத்தி தோற்றதும் உண்டு. தோற்றது என்பதை விட உனக்கு இலக்கியம் வராது என விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் உண்டு. ஆனால் ஆறுவிரல் கொண்ட என் நண்பன் சொல்வதும் பல சமயம் சரியெனப் படுவதுண்டு.(அப்படி என்ன சொன்னான்? கடைசியில் சொல்கிறேன்)

    இலக்கிய வட்டத்துக்குள் வர வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும் என்கிறார்கள். நான் எம்.பில் வரை படித்திருக்கிறேன் என்றேன். அவர்கள் என்னை பார்த்து நகைத்து , இவன் ஆட்டைக்கு லாயிக்கில்லை என பல இடங்களில் புறக்கணித்ததும், மட்டம் தட்டியதும் உண்டு. ஒருவேளை இது தான் இலக்கியமோ. உனக்கு ஜெமோ வைத் தெரியுமா? எஸ் ரா வை தெரியுமா? சாருவை தெரியுமா? என்று குறுகிய வட்டத்துக்குள் சமகால எழுத்தாளுமைகளை உள்ளடக்கி அவர்கள் சார்பாக இயங்கி , அவர்களின் புத்தகங்களை படிக்க ஆலோசனைகள் கொடுத்தார்கள். நான் ஆழ்ந்து படிப்பவன் அல்ல. ஏதோ தெரிந்தவற்றை படித்து , என் குழந்தைகளுக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் சாதாரண துவக்கப்பள்ளி ஆசிரிய மனநிலையிலேயே இயங்குகிறேன்.

    மேஜிக்கல் ரியாலிசம் சாருவின் மேஜிக் . அதை அனுபவித்தாயா? என்னால் எந்த இசத்துக்குள்ளும் ரசவாதம் ஆக முடியவில்லை. குழந்தையின் மனநிலை என்னை தடுத்தது. ஒரு வேளை அவர்கள் எல்லாம் கல்லூரியில் பணியாற்றுவதால் சாத்தியமோ. லிபியை பார் அவனும் ஆசிரியர் தானே. அவனால் எப்படி சாத்தியம் ? அவனும் மேல்நிலைப் பள்ளிக்கு வாத்தியான். அவனும் நம்மை காட்டிலும் மேல் நிலை தான் . அது கூட லிபியை இலக்கிய வாதியாக சாத்தியப் படுத்தியிருக்கலாம்.  புத்தக கண்காட்சியில் லிபியுடன் செல்லும் போது , நான் நாவல்களையும் , கதைகளையும் படிப்பதில்லை என்றான். அவனுக்கு மட்டும் இலக்கியம் எப்படி சாத்தியமாயிற்று. என்னை மட்டும் படி படி என்கின்றனர். நான் படித்தது சரியில்லையோ….!

    இலக்கியம் தெரிய வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பு நூலை வாங்கி படியுங்கள் என்றார்கள். எனக்கு பிரச்சனையில்லை. படித்தேன். அங்கும் பிரச்சனை.  கதா பாத்திரத்தின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. பாடத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை பல இடங்களில் பொருத்திப் பார்க்கும் சாதாரண ஆசிரியர் , அதுவும் அறிவியல் மேல் ஆர்வம் உள்ளவன் எனபதால், எவ்வளவு முயன்றும் பெயர்களை நினைவில் கொள்வதில் தோற்றுப் போகிறேன்.
சமீபத்தில் பட்டு, அப்பாவின் கை துப்பாக்கி போன்ற நூல்களை படித்தேன். தெரியாமல் இலக்கிய கூட்டத்தில் சிக்கிக் கொண்டேன். சீட்டா சரியாக மொழி பெயர்க்கவில்லை. அதன் மூலத்தை படியுங்கள். அதை படமாக எடுக்க போகிறார்கள். அதில் உள்ள சீசனல் வேரியேசனை எப்படி கொண்டு வந்துள்ளான். என்பதில் தான் கதை உள்ளது என விவாதித்து என் மண்டையை காய வைத்து விட்டார்கள். இவர்கள் பட்டு பட்டு என பேசுவது நாம் படித்த பட்டு  தானா?  இல்லை, வேறு எதுவுமோ?  இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பட்டு போய்விட்டோமா ? என நொடியில் நினைக்க செய்த  சாத்தான் அன்று என்னை இலக்கிய வட்டத்தில் மரிக்க செய்தான்.   

    கற்பழிப்பு, வழிப்பறி, கள்ளக்காதல், காதல் கொலை, தற்கொலை, சிறுமி பாலியல் வன்புணர்வு போன்ற விசயங்களை அன்றாட செய்தி தாளில் வாசித்து விட்டு கடந்து போவது போல என்னால் இதை கடக்கவும் முடியவில்லை.  அதே சமயம் ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி என செய்தியை படிக்கும் போது கொதித்து எழுவது போல எழவும் முடியவில்லை. இதை டைப் அடித்த நேரத்தில் தமிழாசிரியர் செல்போனில் புகைப்படம் எடுத்து பாலியல் தொந்தரவு, அடி உதை என்ற செய்தி டிவியில் அலறிக் கொண்டு இருந்தது. இவர்களுக்கு எல்லாம் எதற்கு ஆசிரியர் பணி. நம் கல்வி முறையில் எதோ குறை இருக்கிறது. எத்தனை தகுதி தேர்வுகள் வைத்தாலும் அடிப்படை ஒழுக்க நெறியை தகுதியாக எடுத்துக் கொள்ள தவறியதேன்?

    அன்னிய நாடுகளை பார்த்து, கற்பித்தலும், அவர்களுக்குரிய நடத்தையும் வேறு. நாங்களும் சாதரண மனிதர்கள் தான் என்று நாய்களுக்கு இணையான பிறவிகள் என்ற மனபோக்கு உண்டா? என தெரியவில்லை.  நாக்கை தொங்கப் போட்டு அலைபவர்கள் தான் என்று கூறுபவர்கள் அந்நாட்டில் போய் கல்வி  தொழில் புரியுங்கள். இந்தியாவில் கல்வி சேவை மட்டும் தான் தேவை. முன் மாதிரியான ஆசிரியர்கள் தான் தேவை. என் குறைந்த பட்ச எதிர்பார்ப்பெல்லாம், தயவு செய்து பள்ளி காம்பவுண்டிலாவது மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள். காலமும் சட்டமும் நம்மை குற்றவாளிகளாகவே சித்தரிக்கின்றன. அந்த அதிகபட்ச வாய்ப்பு மாணவனுக்கு வழங்கப்பட்ட சூழலில் கண்டிப்பு நம் நடத்தை மூலமாக பயிலட்டும். இப்போதொல்லாம் என் மாணவர்கள் தவறு செய்தால் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன். அப்படியாவது மாணவர்கள் நம் வலியையும் வேதனையையும் உணரட்டுமே.

    தமில் இலக்கியம் வளர்க்க வேண்டும். எப்படி ? செய்தி தாள் புரட்டிய போது புரட்டி எடுத்தது. செம்மொழி மாநாட்டில் மோசடி. கோடிகள் இல்லா லஞ்ச ஊழல்களுக்கு மதிப்பில்லை போலும். அதனாலோ என்னவோ , கீழ்மட்ட அலுவல்களில் லஞ்சம் தண்ணீர் பட்ட பாடாய் இருக்கிறது.  தண்ணீர் என்றவுடன் அம்மாவின் மினரல் வாட்டர் திட்டம் நினைவுக்கு வருகிறது. நீண்ட பயணங்களின் போது நானும் நா வறட்சியால் தண்ணீர் இன்றி அவதிப்பட்டதுண்டு. அதை விட பேருந்து நிற்கும் இடத்தில் ஒரு லிட்டர் பாட்டில் இல்லை இரண்டு லிட்டர் தான் இருக்கிறது. விலையை விசாரித்தால் எச்சில் தானாகவே ஊறி நா வறட்சியை போக்கி விடும். மறு நாள் பள்ளிக்கு செல்லும் போது சூடு பிடித்து கொள்வது உண்மை. அம்மாவின் ஆசிர் வாதத்தில் தண்ணீர் கிடைத்து விட்டது. பத்து ரூபாயில் . தண்ணீர். சபாஷ். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். (தூரத்தில் இருந்து அதை ஓட்டாக பாராளுமன்ற தேர்தலில் காட்டுங்கள் )அது இருக்கட்டும் .  கலப்படம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ( அட மிக்ஸிங் க்கு சரியா இருக்குதுல்ல….).
  
    ஒருவேளை தி இந்து ஆங்கில நாளிதழ் தமிழில் வெளிந்துள்ளது என் இலக்கிய சந்தேகத்தை நீக்கவா? இல்லை இலக்கியம் என்பது எந்த வட்டத்தில் அடங்கும் என்று சொல்லவா? ஆனால் , தி இந்து வெற்றி பெறும் என்பது அதன் லே அவுட்டிலேயே தெரிகிறது. எனக்கு வந்து சேர வேண்டிய முதல் நாள் பேப்பர் வரவில்லை. ஆனால், இரண்டாம் நாள் பேப்பர் தாமதாமாக வந்தது.  இருப்பினும் மாலைப் படித்த போது மனநிறைவடைந்தேன். நாம் கட்டிய காசு வீண் போகவில்லை. இருந்தாலும் தமிழின் முன்னனி நாளிதழ் போன்று இல்லை என என் மனைவி சொன்ன போது சிரித்தேன். மனச கவர்கிற மாதிரி செய்தி போடணும் என்றாள். இந்த கவர்ச்சி தான் இலக்கியமோ. அட போங்கப்பா… என் ஆசான் தோ.பா பேசிய புத்தக கண்காட்சி பேச்சு நினைவுக்கு வந்தது. எது எக்காலத்திலும் மனதில் நிலைத்துள்ளதோ அதுவே இலக்கியம். எது மக்களுக்கு எக்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கிறதோ அதுவே இலக்கியம். இதைதான் என் ஆறு விரல் நண்பன் அயல் நாட்டு பயணம் போகிறேன் என்றவன் சொன்னான், நீ எழுதுவதெல்லாம் இலக்கியம். ஆனால் அது அனைவரையும் சென்றடைய வேண்டும். அதை பிறர் செய்கின்றனர். நீ உன் எழுத்து மார்கெட்டிங் ஆகும்போது நீயும் இலக்கியவாதி ஆவாய். உன் எழுத்தும் இலக்கியம் ஆகும்.

   அதுசரி நான் இலக்கியவாதியா? இல்லை இது இலக்கிய வியாதியா? எது  

எப்படியோ இதை நல்லா மார்கெட்டிங் பண்ணுங்க… ஒரு முடிவுக்கு வரச் 

செய்யுங்க. 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல மார்கெட்டிங்...

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - நல்லா மார்க்கேட்டிங்க் பண்ணுங்க - இந்த காலத்துல அது இல்லாமல் எதுவும் நடக்காது - விரைவினில் இலக்கியவாதியாக ( வியாதியாக அல்ல ) ஆவதற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தருமி said...

ஆறு விரல் நண்பன் சொன்னால் சரியாகத்தானிருக்கும்!

ஆனால் ஒரு சந்தேகம். எழுதும்போதே தான் ஒரு இலக்கிய வியாதி ஆக வேண்டும் என்றே எழுத வேண்டுமோ?! தன் சுய உந்துதலில் எழுதுவதெல்லாம் எழுத்தல்லவோ.. இலக்கியமில்லையோ?

Post a Comment