Sunday, December 2, 2012

சார் , செக்ஸ்…ன்னா என்ன ?


சார் , செக்ஸ்…ன்னா  என்ன ?   

கடந்த வாரம் எங்கள் பள்ளியில் டெங்கு விழுப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் டெங்கு ஊர்வலத்திற்கு தயாராக இருந்தனர். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி வருகைக்காக காத்திருந்தனர் மாணவர்கள்.  புதிதாக வழங்கப்பட்ட டெங்கு உறுதி மொழியினை மாணவ தலைவி உரக்க படிக்க ,அனைத்து மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.  கல்வி அதிகாரி வந்த பின் மாணவர்களிடம் டெங்கு பரவக் காரணம் என்ன என்று கேட்க, மாணவர்கள் கொசு என்றனர். கல்வி அதிகாரி கொசுவினால் பரவும் நோய்களான டெங்கு, சிக்கன் குன்யா, மலேரியா, யானைக்கால் வியாதி, மூளைக்காய்ச்சல் பற்றி விளக்கம் அளித்து , கொசு பரவாமல் தடுப்பது குறித்து பேசினார். மாணவர்கள் அதிகாரி கேட்ட கேளிவிகளுக்கு பதில் சொல்லி மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊர்வலம் கிளம்பியது. “ஒழிப்போம் ஒழிப்போம் டெங்குவை ஒழிப்போம்!, அழிப்போம் அழிப்போம் ஏடிஸ் கொசுவை அழிப்போம்! தடுப்போம் தடுப்போம் ஏடிஸ் கொசுப்புழு பரவுவதை தடுப்போம்! தெளிப்போம் தெளிப்போம் அபேட் மருந்தினை தெளிப்போம்! என மக்கள் வசிக்கும் பகுதியிலும் , காமராசர் சாலையிலும் மாணவர்கள் ஊர்வலம் சென்று வந்தனர்.  மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. வகுப்பறைக்கு சென்றனர். பாடம் நடத்தப்பட்டது . மதிய உணவு அனைவரும் உணவு அருந்த  சென்றனர்.
என் வகுப்பில் சில மாணவ மாணவர் சிரித்துக் கொண்டே எதோ குசு குசு என்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்து,
 “ என்ன ஒரே சிரிப்பு ?”என்றேன். உடனே துடுக்கான மாணவி பிரியா, “ சார், செக்ஸ் ன்னா என்ன? “ என்றாள். நான் உனக்கு ஏன் இந்த சந்தேகம் இப்போது ? என்றேன். “ நான் சொன்னேன்லா.. சார் சொல்ல மாட்டார்ன்னு ..” என்று அருகில் இருந்த மாணவி சொல்ல.. “நான் பதில் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி தீடீரென்று ஏன் இந்த சந்தேகம் என்று சொல்லணும்”. “சார் நீங்க சொல்லுங்க ..அப்புறம் நாங்க சொல்றோம்..”. “ செக்ஸ் என்பது  பாலினம் அது ஆண் \ பெண் என இருபாலரையும் குறிக்கும் சொல் ”என்று சமாளித்தேன்.
உடனே பிரியா “ அது தான் எங்களுக்கே தெரியும் … நாங்க அத பத்தி கேட்கல…” “அப்புறம் வேறு எத பத்தி..?” என இழுத்தேன்.
சார் நான் விளக்கமா சொல்றேன்.  எஇஓ சார் … சொல்லும் போது ..இது ஒருத்தர் கிட்ட இருந்து பரவாது அப்படின்னு சொன்னார்..அப்ப நம்ம வாயடி பையன் முகேஸ்… செக்ஸ் வியாதி தான் பரவுன்னு சொன்னான்.. அது மட்டுமில்ல செக்ஸ் வச்சுகிட்டா தான் பரவும் என்கிறான்..” என்றாள். நான் அவனிடமே கேட்க வேண்டியது தானே? என சொல்லி முகேஷை அழைக்க சொன்னேன். அதற்குள் முதல் ராங்க் எடுக்கும் மாணவி , “வாடி …நாம நம்ம டீச்சருகிட்ட கேட்போம்..சாரு மழுப்புராரு ..”என ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை நாடி சென்றனர்.
     மீண்டும் ஓடி வந்தனர். சார் இவ்வளவு தானா… இதுக்கு ஏன் சார் பயப்படுறீங்க என்றார்களே பார்ப்போம். நான் பிரியாவை அழைத்து என்ன பதில் சொன்னார் என்றேன். நீங்க சொன்னது போல ஆண் பெண்ணுண்ணு சொன்னாங்க .. நாங்க செக்ஸ் வியாதி என்ன? அது எப்படி வரும்? ன்னு கேட்டோம் என்றாள். அது சரி டீச்சர் என்ன பதில் சொன்னாங்க… என கேட்க, “ சார் .. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் எந்த வியாதியும் வராது.. ஒரு ஆணு பல பெண்களை கட்டிகிட்டாலும், ஒரு பெண்ணு பல ஆண்களை கல்யாணம் பண்ணிகிட்டாலும் இந்த வியாதி வருமாம் சார்…” . “எங்களுக்கு புரிஞ்சு போச்சே..” என அனைவரும் ஒருமித்த குரலில் பதில் அளித்தனர்.
   துவக்க பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு நியாயமானது என்பதை உணர்ந்தேன். துவக்கப்பள்ளி அளவிலே செக்ஸ் கல்வி அவசியம் என்பதையும் இச்செயல் உணர்த்துகிறது. பல இடங்களில் குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வராமல் பார்த்துக் கொள்ள , குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி அவசியம். குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அடுத்த ஆணின் கை படும் போது அதை தட்டி விடும் உணர்வையாவது வளர்க்க வேண்டும்.
பள்ளி அளவிலே குழந்தைகளை பாதுகாக்க கட்டாய இலவச கல்வி சட்டம் உறுதியளிக்கிறது. தமிழக அரசு பாலியல் புகார்களுக்கு உள்ளாகும் ஆசிரியர்களின் சான்றிதழை கேன்சல் செய்யும் உத்தரவையும் பிறப்பித்து இருப்பது வரவேற்க தக்கது. 

3 comments:

Avargal Unmaigal said...

// குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி அவசியம். குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அடுத்த ஆணின் கை படும் போது அதை தட்டி விடும் உணர்வையாவது வளர்க்க வேண்டும்.///

மிக மிக உண்மைசார். சரவணன் நலமா? நீண்ட நாட்களாச்சு உங்கள் பதிவை பார்த்து...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய குழந்தைகளுக்கு நன்றாகவே சிலது தெரிந்திருக்கிறது... இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் பெண் ஆசிரியர்கள் இன்னும் தெளிய வைக்க வேண்டும்...

தருமி said...

சரவணன் நலமா? நீண்ட நாட்களாச்சு உங்கள் பதிவை பார்த்து... இல்ல .. இல்ல .. உங்களைப் பார்த்து .....

Post a Comment