Tuesday, September 27, 2011

பாடம்



வீட்டில்
தந்தை ஊதி தந்த
பலூனில் காற்று
வெளியேறிய போது
அழுதேன்…

பள்ளியில்
அதே காற்று
வெளியேறிய போது
சிரித்தேன்
இது ஆசிரியரின் மிதிவண்டியிலிருந்து….
சிரிப்பும் அழுகையும்
கலந்து தந்தது
பள்ளியை விட்டு சென்ற
எனக்கு
வெளி காற்று….!

ஆசிரியர் தின வாழ்த்து



நீர் இன்றி அமையாது உலகு
என்றேன் அன்று…
நீர் இன்றி அமையாது நல் உலகு
என்கிறான் இன்று… 

ஓவியம்



வானம் வகுப்பறைக்குள்…
செடிகளும் மரங்களும்
கண்களுக்கு விருந்தாய்…
வகுப்பறை முழுவதும்
வண்ணத்து பூச்சிகள்
பறந்து வெளிப்படுத்தின
ரகசியங்களை
பிஞ்சுகளின் கரங்களில்
இருந்து…..
ஆசிரியரை தவிர
அனைவரும் சோலைக்குள்…!

Wednesday, September 14, 2011

குட் டச்…பேட் டச் சொல்லி தரும் ஆசிரமம்


”குந்தியின் புதல்வனே, தொடுவதால் ஏற்படும் இன்பங்கள் தான் நம் துன்பத்திற்கு மூலகாரணங்களாக விளங்குகின்றன. அவைகளுக்கு தொடக்கம் இருக்கும்  காரணத்தால் , அதே போன்று முடிவும் உண்டு. எனவே விவேகம் நிறைந்தவன் அவற்றில் எத்தகைய இன்பத்தையும் காண்பது இல்லை”
 நான் என் தோழியின் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் குடும்பத்துடன் டி.வி பார்த்து கொண்டு இருந்தனர். ஆதித்யா சேனல் என்று நினைக்கிறேன். விளம்பர இடைவேளை யாரும் சேனலை மாற்றாமல் டி.வி.யில் மூழ்கி இருந்தனர்.  அப்போது விளம்பரத்தில் ஒரு பெண் குழந்தை வயதான தாத்தாவின் மடியில் உட்காருவது போன்று காட்சி வந்தது. உடனே , என் தோழி தன் பெண் குழந்தையிடம் , இப்படி யார் மடியிலும் பொசுக்கென்று எந்த சூழலிலும் மடியில் அமரக் கூடாது. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் . இது மோசமான டச்சாக கூட இருக்க வாய்ப்பு உண்டு. நாம் எப் போதும் ஒரு அடி விலகியே ஆண்களுடன் பழக வேண்டும். மேலும் அதற்காக எல்லா ஆண்களையும் சந்தேகப் பார்வை பார்க்க கூடாது. அக் குழந்தை அப்பா மடியிலக் கூட உட்காரக் கூடாதா? (எட்டாம் வகுப்பு படிக்கும் மகள்) எந்த ஆண் மடியிலும் என்று தான் சொன்னேன்.. அப்பாவா இருந்தாலும் ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ண வேண்டும். அதற்காக எப்பவும் மடியில உட்கார நினைக்க கூடாது .  என டி.வியின் விளம்பரங்கள் அனைத்துக்கும் ஒரு விளக்கம் தந்து கொண்டு இருந்தார்.
அன்னையின் வளர்ப்பு தான் குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் உருவாகிறார்கள். எனக்கு ஆச்சரியம் அளித்தது. மனநல மருத்துவர்கள் பலரும் இது போன்ற கருத்துக்களையே முன் வைக்கின்றனர்.  
”நீ சரித்திரத்தைப் படித்துப் பார் .ஒவ்வொரு நாட்டின் வீழ்ச்சிக்கும் அடித்தளமாக, நீதிமுறைமையற்ற தன்மை அல்லது புலனுணர்விக்கு ஆட்பட்ட தன்மையே விளங்குகிறது என்பதை நீ உணர்வாய். ஒரு நாட்டிலே அதன் மக்கள் கடவுளையும் , உண்மையையும் வழிபடுவதற்கு பதிலாக, புலன்களை வழிபட்டால் , அந்நாட்டின் வீழ்ச்சி மிக அருகாமையில் உள்ளது என்பதை உணரலாம்.”
சாரதா ஆசிரமத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு வித பாச உணர்வு  எனக்குள் பரவி யிருந்தது. அன்பின் வெளிப்பாடு என்னை அசர வைத்தது. அங்கு பயிலும் குழந்தைகள் தத்துவப்பாடல்களை பாடிக் கொண்டே இருந்தனர். முத்துக்கு முத்தாக.. என்ற பாடலை பாடும் போது தன் அருகில் உள்ள மாணவனின் தோள்களை பற்றிக்  கொண்டு அனைவரும் (அந்த வரிசையில் அமர்ந்துள்ள மாணவர்கள் அல்லது  மாணவிகள்) ஒற்றுமையுடன் உணர்வு பூர்வமாக பாடுவதை காணும் போது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இங்குள்ள மாணவர்களுக்கு திட்டமிடல் ,அதனை  நடைமுறைப்படுத்துதல் , பின்பு அச்செயலை சரிபார்த்தல் என்பது போன்ற தலைமை பண்பை வளர்க்கும் விசயங்கள் முறையாக செயல் வடிவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

 கடைசி நாள் , அனைவரும் வீட்டு நினைவில் சுழன்று , எப்படா குடும்பத்தினரை பார்ப்போன் என நினைத்து மகிழ்ச்சியாக கிளம்பும் தருணம் , (குறிப்பாக எம்.பிரபு என்பவர் தன் சகோதரியின் திருமணம் என்பதால் காலை பதினோரு மணிக்கே கிளம்ப ஆவலாக இருந்தார் ). ஆனால், எழுபத்து ஐந்து பைசாவில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் ஆரம்பித்த அந்த அன்னையை பார்க்க போகிறேம் என்ற மகிழ்ச்சியில் எல்லாவற்றையும் மறந்து , பணம் பெற்று நடத்தும் அந்த ஆசிரமத்தின் மெட்ரிக் பள்ளியை பார்வையிட அழைத்து சென்றனர்

அப்படி பட்ட பள்ளியில் படிக்க கொடுத்து வைக்க வேண்டும். மூத்த மாணவர்கள் சமூகத்தில் இருந்து தான் பெற்ற அனுபவங்களை அடிக்கடி தற்போது பயிலும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். சமூகத்தில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் எதிர் நோக்கவுள்ள நட்பு குறித்த பிரச்சனைகளை , மூத்த மாணவர்கள்  தன் அனுபவத்தின் மூலம் விளக்குகின்றனர்.  தான் இப்போது முதன்மை நிர்வாக அலுவலராக இருக்க நான் மாஜிக்களிடம் இருந்து  கற்று சென்ற பாடங்கள் தான் உதவுகின்றன. ”எப்போதும் நீங்கள் இங்கு பெறும் அனுபவங்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் , இதை விடாப்பிடியாக வாழ்வில் பிடித்து கொள்ளுங்கள் ,அது தனாகவே உங்களை இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையச் செய்யும். ” என்பது போன்ற அறிவுரைகள் கொண்ட சி.டிக்கள் பார்க்கும் போது அவை எங்களை வியப்படைய செய்தன.

        இதை என்னுடன் பயிற்சிக்கு வந்த ஸ்ரீதர் சொல்வது போல சொன்னால் இப்படி தான் இருக்கும்.
     “என் வாழ்நாளில் இப்படி பட்ட ஒரு சி.டி யை பார்த்ததே யில்லை. இதெல்லாம்  உங்களாலத் தான் மாஜி முடியுது. உண்மையிலே உங்கள பார்க்கும் போது அதிசயமாக இருக்கிறது. உலக அதிசயங்கள் ஏழு எல்லாம் இல்லை . இது தான் முதல் அதிசியம். ஆச்சரியம் , அந்த பையன் என்னா அழகா பேசுறான். .. என்னால கூட இப்படி பேச முடியுமான்னு தெரியல… சின்ன வயசு .. ஒரு இருபது இருக்குமா..ஒரு லட்சம் மாச சம்பளம் வாங்கிறான்னா பார்த்துக்கங்க.. இந்த பசங்களும் அவர்களிடம் எப்படி யெல்லாம் கேள்விகளை கேட்டு தங்கள் சந்தேகங்களை போக்கி கொள்கிறார்கள்.. உண்மையிலே சூப்பர்”

      அந்நிகழ்வில் நாங்கள் அனைவரும் பேசினோம். மேடையில் நாங்கள் பத்து பேர் மட்டுமே இருந்தோம். மாஜிக்கள் மாணவர்களைப் போல இடப்புறம் உட்கார்ந்து இருந்தனர். மாணவர்கள் அவர்களுக்கு பின்னாலும் , வலப்புறம் பெண்குழந்தைகள் நடுவில் மாணவர்கள் என முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அமர்ந்து இருந்தனர். (அனைவரும் ஒன்பது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்) . நிகழ்ச்சிகளை மாணவர்களே தொகுத்து இருந்தனர். நாங்கள் பேசி முடிந்ததும், மாஜி ஆசிரமத்தில் இருந்து தான் கற்று கொண்ட விசயங்களை சில மாணவர்கள் பேச அனுமதித்தனர். அவர்களில் ஒரு மாணவி பேசும் போது , தான் வேறு பள்ளியில் முப்பதாயிரம் கட்டணம் செலுத்தி விட்டு, இங்கு வந்து சேர்ந்தேன். என் தந்தை விரும்பு சேர்த்து விட்டார். அப்போது முப்பதாயிரம் போகுதே என நினைத்தேன். ஆனால், இங்கு வந்த பின் பணம் எல்லாம் ஒரு விசயமே இல்லை. குணம் தான் முக்கியம் என்பதை உணர்ந்தேன். நான் இதற்கு முன் சினிமா பார்க்கும் போது இரண்டு மணி நேரத்தில் படம் பார்த்து முடித்து விடுவேன். ஆனால், இங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து படம் பார்க்கும் போது ஒரு படம் பார்க்க ஏழு மணி நேரம் ஆகிறது , இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவுங்க ஒவ்வொரு சீன்(seen)னா விளக்கி, இது தப்பு , இது சரி , இதுனால என்ன நன்மை, என்ன தீமை , இந்த குணத்தால நீ என்ன பெற முடியும் , இந்த சமூகம் என்ன பெற முடியும் , வீட்டுக்கு என்ன நன்மை ? தீமை? இதன் விளைவு என்ன? என விளக்கி காட்டும் போது , எனக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்பது தெரிந்தது.” என்றாள் .

நீ பார்த்த படத்தில் உனக்கு பிடிச்ச விசயம் என்ன? இல்ல பிடிச்ச சீன் சொல்லு ? என்றார் காவியுடை அணிந்த மா.

      “ கதா நாயகி ஒருத்தனை காதலிப்பாங்க. அவன் வஞ்சனையுடன் பழகுவான். ஆனால், வீட்டில் தீடீரென்று மாப்பிள்ளை பார்த்திருவாங்க… அதுக்கு பின்னால காதலனை சந்திக்க போவாங்க.. அப்ப அவன் எப்பவும் போல அவளை தொட போவான், அப்போது அவள் அவன் கைகளை தட்டி விடுவாள் , இது அடுத்தவனுக்கான உடம்பு இத தொடக்கூடாது என சொல்லுவாள்” என அம்மாணவி வெகுளியாக சொன்னாள்.
  
    என் தோழி தன் வீட்டில் எப்படி விளம்பரங்களை பார்க்கும் போது எது நல்லது? எது கெட்டது? என தாய் உள்ளத்தோடு தன் குழந்தைக்கு குட் டச் பேட் டச் உணர்த்துவது போல , இந்த ஆசிரமத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தேர்ந்தெடுத்த படங்களை திரையிட்டு, அவற்றிலுள்ள நல்லது கெட்டது    எது என்பதை இங்குள்ள மாஜிக்கள் விளக்குகிறார்கள். இவர்கள் தாயாகவே வாழ்கிறார்கள்.
அது சரி… டி.வியில் போடப்படும் படங்களை இவர்களால் தடுக்க முடியுமா? இந்த மாணவர்கள் அந்த படங்களை பார்த்து தானே ஆக வேண்டும்!
என்ற உங்களின் கேள்விகளுக்கு அடுத்த இடுகையில் பதிலளிக்கிறேன்.  
                                                                அதிசயங்கள் செய்து காட்டும் அதிசய பூமியின் அதிசயங்கள் தொடரும்

Monday, September 12, 2011

ஆச்சரியப்படுத்தும் ஆசிரமம்..!


”தீமை பயக்கும் தீவினைகளைச் செய்தல் எளிது. நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தல் மிகவும் கஷ்டமாகும்”.- தம்ம பதம்.

ஆசிரமத்தில் இருந்த போது தினமும் காலை ஆறு மணிக்கு ஆசிரியப் பயிற்றுநர் சந்துருவுடன் நான்கு வழிச் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டேன். சீறிப்பாயும் புலியைப் போல கார்கள் லாரிகளை முந்திக் கொண்டு கடந்தன. சேலம் பிரிவு வரை சென்று திரும்புவோம். அப்போது நாய்கள் சர்வ சாதாரணமாக சாலையைக்  கடக்கும் அழகைப் பார்த்து ரசிக்க முடிந்தது. எந்த வித பய உணர்வும் இன்றி , வாகனங்களின் ஓசையில் , வாகனங்களின் வேகத்தை அறிந்து அதற்கு தகுந்த மாதிரி விளையாடிக் கொண்டதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் , அன்பே சிவம் படத்தில் நாயினால் ஏற்படும் விபத்து நினைவுக்கு வந்து வாட்டியது. தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த தெரு நாயை ஓட ஓட விரட்டி அடித்த வயலுக்கு காவல் காத்திருக்கும் நாய்கள் , எல்லைத் தாண்டாமல் குரைத்து துரத்தியது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
    
முந்தி செல்வது
நான்கு வழிச் சாலையில்
இயற்கை…
முந்துதல்
அடுத்தவரை புண்படுத்தாமல்
என்பது பாடம்

அதிகாலை இயற்கை காற்றை சுவாசிப்பது என்பது ஒரு வித கலை. ஆனால், அங்குள்ள மாணவர்கள் எழுந்ததும் , குளித்து முடித்து விட்டு , தெய்வ வழிப்பாடு முடிந்து, வளாகத் தூய்மை மேற்கொள்ளும் காட்சி , என்னை வியப்படைய செய்கிறது. ஏழு மணிக்கு எங்கள் அறையை தேடி டீ வந்தது. அதைக் கொண்டு வந்த வாட்ச் மேன் , குளித்து முடித்து , நெற்றியில் விபூதி பூசி ஆச்சாரமாய் இருப்பது என்னை ஒருமுறை சுய பரிசோதனை செய்ய  வைக்கிறது.  
நான்காம் , ஐந்தாம் நாளில் சாரதா கல்வியில் கல்லூரியின் விழுமியங்கள் கற்றுத்தரும் பேராசிரியர் டாக்டர். சீதாராம் அவர்களின் காலை ஏழு மணி  சுவாசப்பயிற்சி எங்களுக்கு  புத்துயிர் ஊட்டியது. சீதாராம்  அவர்கள் ஒரு நடமாடும் நூலகம் . விழுமியங்கள் குறித்து மிகவும் சுவரசியமாக சொல்கிறார். விழுமியங்களுக்கு தகுந்த கதைகள் அடுக்கு அடுக்காக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. நகைச்சுவை உணர்வு நிரம்ப பெற்றவர். அவர் இருக்கும் இடம் மிகவும் மகிழ்ச்சி கரமாக இருக்கும் என்பது அவர் எங்களில் ஒருவராக  இருந்து , மிகவும் மகிழ்ச்சியுடன் , சரியான வழிக்காட்டலுடன், என்ன தான் டிவியேட் பண்ணி விட்டாலும், எங்களை ஒருங்கிணைத்து , ஒத்த கருத்துக்களுடன் செயல் பட செய்ததில் இருந்து அறிய முடியும்.  நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதை உணர்ந்தோம். யாருக்கும் கிட்டாத ஒரு பயிற்சி இலவசமாக கிட்டியது. பி குட் டூ குட் என்பதன் பயனை உடனடியாக அனுபவித்தேன். என்னை மறந்து , ஒரு யோகியின் மனநிலையில் எந்த பந்தம் இன்றி , கொடுக்கப்பட்ட வேலை குறித்தும், இந்த ஆசிரமத்தின் செயல் பாடுகளை அறிந்து கொள்வதிலும் அதிகம் செலவிட்டோம்.   

நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பின் புறம் இருந்த முதியோர் இல்லங்களுக்கு சென்றோம். அந்த மாலை என் மனதை உலுக்கியது. வயதானோர் , தம் குழந்தைகளால் கை விட பட்டோர், யாரும் இல்லாத ஆதரவு அற்ற பாட்டிகள் ஒரு கும்பலாக ,ஒரே குடும்பமாக அமர்ந்து இருந்தனர். தயாக் கட்டைகள் உருட்டிக் கொண்டும், சொட்டாங்கற்கள் விளையாடிக் கொண்டும், கதைகள் பேசிக் கொண்டும், வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டும், வியாதியஸ்தர்கள் டாக்டரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தனர். பிறந்த இடத்தில் இருந்து விரட்டப்பட்டாலும் , ஒன்று கூடிய இந்த ஆசிரமத்தில் , சாரதாவை தன் சொந்த அன்னையாக ஏற்று மகிழ்வுடன் இருந்தனர்.

எங்களை பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சி பொங்க ஓடி வந்தனர். எங்களுடன் வந்த அம்மாவின் கைகளை தொட்டு கொஞ்சி, அன்போடு அமர வற்புறுத்தினர். எங்களுடன் வந்த அந்த அன்னை , நான் உங்கள் குழந்தை, சும்மா ஓவராக பண்ணாதீங்க.. நீங்க அமர்ந்து பேசுங்கள் என்று அன்போடு கண்டித்தார். நீங்க இல்லைன்னா என்ற டயலாக்குக்கு, எல்லாம் சாரதா செயல் என அடக்கத்துடன் பதில் தந்தார். அவர்களுடன் தரையில் அமர்ந்தார். (வராண்டாவில் விளையாடி கொண்டிருந்ததால்)  நாங்களும் அவர்களுடன் அமர்ந்தோம். தம்பி விஜய் சொட்டாங்கல் விளையாடும் போது பாடும் பாடலை பாட சொன்னார். அழகாக பாடினார்.(உடம்புக்கு சரியில்லை என்றாலும் பேரன் கேட்டுக் கொண்ட்தால்). பொக்கிஷம்.. ஆசிரியர்கள் தங்கள் கை தொலைப்பேசியில் அதை பதிவு செய்தனர். வீடியோவை அவர்களுக்கு பிளே செய்தும் காட்டினர்.  சுந்தர் தன் இனிய குரலில் பாடல் பாடி பாட்டிகளை குசிப்படுத்தினார். அருகில் இருந்த பாட்டி விநாயகர் குறிந்து , முருகன் குறித்து பல பாடல்களை கால் மணி நேரமாக தொடர்ந்து பாடி அசத்தினார். (நாங்களே நிறுத்த சொன்னதால்) . அருகில் உயிர் மூச்சு மூக்குக்கும் , நுரையீரலுக்கும் நடுவில் ஊசலாடிய பாட்டி, தலையாட்டிக் கொண்டு எங்களையே உற்று பார்த்தவர் (சுமார் எண்பது இருக்கும்), எங்களை அழைத்து பாடி காட்டினார். யாரும் கொடுத்து வைக்காதது. எங்களை தன் இரக்கமுள்ள பார்வையால் ஆசிர்வதித்தவராய், ராமன் குறித்த பாடலை பாடி அசத்தினார்.
  அந்த நேரம் டாக்டர் காரில் வரவே, மருத்துவ சோதனைக்கு வசதியாக அங்கிருந்து விடைப்பெற்றோம். அங்கு நிலவும் சூழல் குடும்பங்களில் கூட கிடைக்காது. உறங்கும் அறை கட்டில் வசதியுடன்., மருத்துவர் அறை, பூஜை அறை, உணவருந்தும் அறை, நோயளிகள் தங்க தனியான விசாலமான படுக்கை அறை, டி.வி பார்க்க தனி அறை என சகல வசதிகளுடன் ஒர் அன்னையின் அரவணைப்பில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். விடைபெறும் போது அவர்களின் முகத்தில் ஒருவித கவலை கோடு விரவி யிருந்தது அறிய முடிந்தது. எங்களில் அவர்களின்  குழந்தைகள் , பேரன் பேத்திகளை கண்டதாகவே அறிய வருகின்றேன். கட்டணம் இன்றி, அவர்களுக்கு  சாப்பாட்டிலிருந்து, மருத்துவம் என அனைத்திலும் இலவசமாய் நடத்தப்படும் ஆசிரமத்தின் அதிசயத்தைக் கண்டு அசந்தேன்.  

“வையத்தை நீர்க் குமிழியாகவும் , கானல் நீராகவும் காண்பவனை எமதர்மன் கண்டுகொள்ள முடியாது” என்பதாலோ என்னவோ அங்குள்ள அனைவரும் நல்ல மனநலத்துடன், உடல் நலத்துடன் , தேக ஆரோக்கியம் பெற்று  ,அதிக பட்ச வயதிலும்  மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.  அத் தருணத்தில் என் தாய் என் கண்ணில் தெரிந்தாள். அவள் வளர்ந்து என்னை ஆளாக்கிய விதம் நினைத்து பெறுமைப் பட்டேன். ஆனால், என் முன்னாள் வெள்ளையாடை அணிந்து , எந்த வித சலனமுமின்றி, எதையும் பற்றி கவலை யற்றவராக ,எங்களை வழி நடத்திக் கொண்டிருந்தார் , சாரதா கண்டெடுத்த  அன்னை நிஷ்காம்ய ப்ராணா மாஜி. .    

”நீ எங்கெல்லாம் இந்த கால சக்தியின் சிறந்த , உயர்ந்த , வெளிப்பாடுகளைக் காண்கிறாயோ, அங்கு கடவுள் தன்னை மிக அதிகமாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.”
”எப்பொழுதெல்லாம் ஒழுக்கம் குறைந்து தீமை மேலோங்குகிறதோ, அவர், கடவுள் மனித குலத்திற்கு உதவுவதற்காக அவதாரம் எடுக்கிறார்”
இந்த பகவத் கீதையின் சாரத்தை அங்கு உள்ள அம்பாளிடமும் , மாஜிக்களிடமும் கண்டேன். அதை சொர்க்க பூமியாகவே உணர்ந்தேன். எங்களை  தவிர தீய குணம் படைத்தவர்கள் ( வாட்ச் மேன் முதல் கொண்டு) ( தீயவர்கள் என்பது எதையும் சந்தேகத்துடன் இது சாத்தியமா? இவர்கள் எப்படி இப்படி ஒரு அமைதிக்கான விழுமியங்களை அனைவர் மனதிலும் விதைக்க முடிந்தது ?என்ற ஐய்யப்பாட்டு உலவுதல். ஐயமே தீயவனுக்கானது என கருதுகின்றேன்) யாரையும் நாங்கள் கணவில்லை. நேரம் கிடைக்குமானல் உளுந்தூர் பேட்டை அருகில் திருச்சி நோக்கி செல்லும் போது உள்ள இடைக்கல் என்ற இடத்திலுள்ள சொர்க்க பூமியாம் இராமகிருஷ்ணா மடத்தை  பார்வையிடுங்கள்.

    சொர்க்கத்தின் கதவுகள் இன்னும் திறக்கப்படும்… 

Sunday, September 11, 2011

என்னை ஆச்சரியப்படுத்திய ஆசிரமம்


”சிறந்த குணத்தை உருவாக்குகின்ற , மன வலிமையை வளர்க்கின்ற , அறிவை விரியச் செய்கின்ற , ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கிற கல்வியே தேவை.” –விவேகானந்தர்.
       நான் கடந்த ஆறு நாட்களாக ஒரு சன்னியாசி தன்மையில் வாழ நேர்ந்தது என்று சொல்வதை விட உண்மையான சகோதரத்தை உணர முடிந்தது என்பதே உண்மை. பீடிகை யிடாமல் விசயத்திற்கு நேரடியாக வருகின்றேன்.
       அமைதிக் கல்விக்கு பயிற்சி கட்டகம் அமைக்கும் பணிக்கு மதுரையில் இருந்து என்னை தேர்வு செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வருகை புரிந்த பல ஆசிரியர்களில் என்னை போன்று பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு , உளுந்தூர் பேட்டை இடைக்கல் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரிக்கு பயிற்சி கட்டகம் தயாரிக்க (5.9.2011 முதல் 9.9.2011 வரை )அனுப்பி வைக்கப்பட்டனர்.
       நுழைந்த நாள் முதலாய் ஒருவித புதுமையை உணர்ந்தேன். வெள்ளை ஆடையுடுத்திய சகோதரிகள், காவியுடை அணிந்த சகோதரிகள், மஞ்சள் உடை, பின்னர் கலர் ஆடை அணிந்த சகோதரிகள் என பலரை பார்க்க முடிந்தது.
      ஆடைகளின் நிறங்களில் அவர்கள் வேறுபட்டாலும் , குணங்களில் ஒன்று பட்டு , சேவையை முழுமனதாகக் கொண்டு , முழுமையான ஆன்மீகம் கலந்த உண்மையான விழுமியங்கள் வெளிப்படுத்தும் தன்மையில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.  வந்த நாள் முதலாய் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை உயர்வான நிலையில் வைத்து பூஜிக்க தொடங்கினர். வழியெங்கும் குருகுலத்தில் பயிலும் மாணவர்கள் முதல் பணி புரியும் அனைவரும் எங்களை ஒரு புன்னகையுடன் நேசித்தனர். விவேகனாந்தரின் சிந்தனைகளை விதைப்பவர்களாக எங்களை எண்ணினர். விழுமியங்களை சொல்ல வந்த எங்கள் அனைவர் கருத்தும் ஒத்துள்ள தன்மையையும், நாங்கள் அனைவரும், சமூகம் எதிர்கொண்டுள்ள பல தீய விசயங்களை போக்க ஆசிரியர்களிடம் மனமாற்றம் வேண்டும் என்பதிலும் , அதன் வாயிலாக மாணவர்கள் நற்பண்புகளை கொண்டவர்களாக மலரச் செய்து , அமைதியான சமூகம் பூக்கச் செய்யலாம் என்பதில் தன்னம்பிக்கை கொண்டவர்களாக செயல் பட்டதால் , அவர்களின் ஆசிரம செயல் பாடுகளை அறியச் செய்வதில் ஆர்வமாய் இருந்தனர். தினமும் மாலையில் ஆசிரம செயல் பாட்டை விளக்க கேம்பஸ் ரைட் ஏற்பாடு செய்தனர்.
”கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனதில் நிறைப்பதல்ல. மனதைப் பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம்”-விவேகானந்தர்.
       எனக்கும் , என்னுடன் வந்துள்ள ஊட்டியை சேர்ந்த விஜய ராஜ் என்ற நண்பருக்கும் ஆசிரமத்தின் அமைதியையும் , மாணவர்களின் ஒழுக்கத்தையும் , நாங்கள் உணவுக்கு வரும்போதும் போகும் போதும் (நாங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்து உணவருந்த அரை கிலோமீட்டர் செல்ல வேண்டும்) , வழியில் கே.வி.பி, மற்றும் குருகுல ஆஸ்டல் மாணவர்கள் என பலரும் ) ஜி ஜி நமஸ்தே, தன்னியவாத் என சொல்லும் போதும் அரசு பள்ளி மாணவர்களின் விழுமியங்கள் பற்றி நீண்ட விவாதம் நிகழ்த்தியுள்ளோம். ஆஸ்ரமத்தின் வளாகத்தை தூய்மை செய்வதில் இருந்து, செடிக்கு தண்ணீர் ஊற்றுவது , சாப்பாட்டு தட்டை கழுவி அடிக்கி வைப்பது என்று மாணவர்களின் செயல் பாட்டை அடுக்கி கொண்டே போகலாம். அரசு பள்ளிகளில் வகுப்பறையை கூட்டினாலே பிரச்சனை ஆரம்பித்து விடுகிறது.  
        விஜய் என்னைப் போன்று இலக்கிய தாக்கமும் , ஆர்வமும் கொண்டதால் , இருவரும் ஒத்த மனநிலையில் காணப்பட்டோம். எனக்கு முமுமையான ஆன்மிகம் ஒழுக்க நெறியை வளர்க்கும் என்பதில் ஐயம் உண்டு. விஜய் என்னிடம் பலமுறை சார் , நீங்கள் சொல்வது போல முழுமையான மதச்சாயம் , வேறு விதத்தில் திசை திரும்பி மத தீவிர வாதத்தை வளர்கவும் வாய்ப்பு உண்டு என்று இரவுகளில் (வந்த இரண்டு நாட்களில்) புலம்பியதும் உண்டு.  

       ஆனால் எங்கள் சிந்தனைகள் தவறு , இது மதத்தை போதிக்கும் நிறுவனம் அல்ல . முறையான ஆன்மிகத்தின் வழியில் மட்டுமே சமூகத்தில் அமைதியை விதைக்க முடியும் என்றும், வாழ்வியல் விழுமியங்களை உணர்வு பூர்வமாக கொடுக்க முடியும் என்பதை பல தருணங்களில் அங்குள்ள அனைத்து மாணவர்கள் எங்களுக்கு  நிரூபித்து காட்டி, என்னுள், மன்னிக்கவும் எங்களுக்குள்  குருகுலத் தன்மையை மலரச் செய்தனர். எங்கள் இருவருக்கும் ஊருக்குச் செல்லும் போது நாமும் குருகுல மாணவர்களாக இல்லையே என்று ஏக்கம் உருவானது.

“எழுங்கள் , விழியுங்கள் , தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பது போன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.” – கடோபநிஷதம்.

இங்குள்ள மாணவர்கள் உண்மையான குருவை கண்டவர்கள். கொடுத்து வைத்தவர்கள். மூன்றாவது நாள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பார்வையில் நடைபெறும் கே.வி.பி. அதாவது இதுவரை பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டு பிடித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை , வாய்ப்புகளை ஏற்படுத்தி , தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நடைபெறும் உண்டு உறைவிடப் பள்ளி. ஆசிரமத்தின் நேரடி பார்வையில் அவர்களின் குருகுலத் தன்மை மாறாமல் நடைபெறும் பள்ளி. மாலையில் பார்வையிட சென்றோம். மாணவர்களே உருவாக்கிய காகித பூக்களால் எங்களை வரவேற்றார்கள் . செருப்புகள் நேர்த்தியாக அழகாய் பார்பவர்களை கவரும் விதத்தில் பாங்குடன் அடுக்கு வைக்கப்பட்டு இருந்தது. (  இதை இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றேன் என்றால் , அந்நிகழ்வுக்கு அடுத்து ஆசிரமத்தில் எல்லா இடங்களிலும் , எல்லா சூழ்நிலையிலும் , செருப்புகளை நோக்கும் போது அவை வரிசையாகவே அடுக்கப்பட்டு இருந்தது. இவை எம் வருகைக்காக உருவாக்கப்பட்டவை யல்ல. இதில் வெட்கப்படும் விசயம் என்ன வென்றால் நாங்கள் மட்டுமே கோவிலின் வெளியில் செருப்பை எறிந்து செல்வது போல முறையற்று  வீசி சென்றோம்.)

                  வகுப்பறைகள் குப்பைகள் அற்று கோவிலாக காட்சியளித்தது. படுக்கையறைகள் அதைவிட நேர்த்தியாக ( நாங்கள் தங்கிய அறையை பார்த்திருந்தால் , எங்களை இக் குழந்தைகளிடம் பாடம் பயில சொல்லியிருப்பீர்கள்). எங்களுடன் வந்திருந்த ஆசிரியர் சுந்தர் குருகுல மாணவர் என்பதால், அவர் தன் இனிமையான குரலில் பல பாடல்களை பாடி அசத்தினார். நாங்கள் அவரின் பாடலில் சோர்வின்றி நீண்ட நேரம் பணிபுரிந்தோம்.  அவரின் நண்பர் ராஜா ( அதே ஊர் காரர்) அக் குழந்தைகளிடம் ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் எதுவாக உருவாக விரும்புகிறீர்கள்?  பல குழந்தைகள் ஐ.ஏ.எஸ்., என்பதற்கும் , ஐ.பி.எஸ்., க்கும் கை தூக்கினார்கள். அவர் கேள்வி கேட்கும் போது நல்ல ஆசிரியர்களாக யார் உருவாக போகிறார்கள்? என கேட்டார். அதற்கும் சில குழந்தைகள் கை தூக்கினர். இப்படி பல பணிகளை கேட்கும் போது பல மாணவர்கள் இரண்டுக்கு மேற்பட்ட பணிகளுக்கு கை தூக்கினர். பின்னர் அவர் , இது வரை எதற்கும்  கை தூக்காத மாணவிகள் உண்டா? என்றார். ஒரு மாணவி மட்டும் கை தூக்கினாள். ஏன்? நீ எதுவாகவும் உருவாக முடிவெடுக்க வில்லையா? என்று கேட்டார். அதற்கு அம்மாணவி தந்த பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    இதுவே சாரதா ஆஸ்ரமத்தின் பணிக்கு ஒரு சாட்சியாகவும் இருக்கும் என நினைக்கிறேன். நானும் ,  என் நண்பன் விஜயும் அந்த இடத்தில் தான் அசந்து போனோம். மாறி போனோம். ஆன்மிகம் மட்டுமே உலகில் நல்ல எண்ணத்தை விதைக்க முடியும் என நம்பிப்போனோம். தேவர் சொன்னாமாதிரி ஆன்மீகமும் தேசமும் இரண்டு கண்கள் என்பதை உணர்ந்தோம். ஆன்மீகத்தை முறையாக இளமையில் விதைத்தால் இத்தேசத்தில் எதையும்  சாதிக்கலாம். வலிமையான ஊழல் அற்ற பாரதம் விரைவில் உருவாகும் என்பதற்கு இதுவே சாட்சி.  
இதோ அம்மாணவியின் பதில்:
“ஜி, நான் என்ன வேணாலும் ஆகிறதுல பிரச்சனையில்ல, எந்த வேலை வேண்டுமாலும் செய்யுறதுல பிரச்சனையில்லை, ஆனா வாழ்வில் நான் ஒரு நல்ல ஒழுக்கமுள்ளவளாக வாழ வேண்டும் , அது தான் முக்கியம் “
               ”இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒர் ஆசிரியருடனே பிறந்துள்ளான். நீ அவருடைய அறிவுரைகளை உண்மையான உறுதியுடன் பின்பற்றினால், இந்த வாழ்விலேயேகூட (இப்பிறவியிலேயே) உன்னிடமுள்ள வரம்பற்ற முழுமையை உன்னால் உணர்ந்துகொள்ள இயலும்” என்ற சுவாமி ஜியின் வரிகளின் அர்த்தத்தின் உண்மையை அங்கு பயிலும் அனைவரிடத்திலும் கண்டேன். வாழ்வில் நாற்பதாவது அகவையில் ஒரு ஆசிரியராக அந்த ஆஸ்ரமத்தினை கண்டுள்ளேன். நிச்சயம் ஒரு வெறி கொண்டு என் மாணவர்களும் இதே தன்மையுடன் உண்மையான விழுமியங்கள் பெற்றவராக திகழச் செய்வேன் என்ற உறுதியுடன் அந்த ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினேன். இருந்தாலும் ஏகலைவனாக மானசீகமாக கற்ற பாடத்தினை , திக்கிட்டும் எல்லா திசைகளிலும் பரப்புவதே என் பணியாக இனி இருக்கும் . நான் அங்கிருந்து வெளியேறி விட்டாலும், அவர்கள் முழுமையாக என் மனதில் நிறைந்து நிரந்தரமாக தங்கி விட்டனர் என்பது தான் உண்மை.
…..தொடரும் அதிசயங்கள்.  

Saturday, September 3, 2011

பிழியப்பட்ட சக்கைகள்


சாரு பிழியப்பட்ட
கரும்பு சக்கைகள்
பள்ளிக்கூட வாசலில்…
வகுப்பறையில்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்
ஆசிரியர்…

சுதந்திரமாய்
மரத்தடி நிழலில்
காகம் கரைகிறது
வகுப்பறையில் மௌனமாய்
மாணவர்கள்….

பறந்து வந்தமர்ந்த காகம்
யாருக்கும் அஞ்சாமல்
ஆனந்தமாய் எச்சமிட்டது
கால்சட்டையை பிடித்து
ஓடிவந்த மாணவன்
தலைமையாசிரியரை பார்த்ததும்
அடக்கிக் கொண்டு திரும்பினான்…