Thursday, May 5, 2011

வெளிச்சத்திற்கு பின் ...

  எதை எழுதுவது என்று தெரியாமலே எழுதுகிறேன். நீண்ட நாட்கள் எழுத மறந்ததால் ஏற்பட்ட விளைவா? இல்லை எழுத்து என்பது  கருத்துகளுக்குள் அடைப்பட்ட ஒன்று என்ற சிந்தனையால் வந்ததா? பொருள் அற்று எழுதுதல் சுவரசியம் அற்றதாக அமைந்து விடுமோ? ஆனால் ,இன்று எதையாவது எழுதவேண்டும் என்று முடிவுக்கு வந்து   அமர்ந்த போது தான், நடுத்தர வர்க்கத்தினர் வயிற்று பசிக்கு எதையாவது அடுக்களையில் தேடி ,பசியை போக்க போராடும் உணர்வு ஏற்பட்டு ,எழுத தேடி அவதிப் படுகின்றேன்.

      தினமும் காலை எட்டு மணிக்கு எழுந்து ,தன் இயந்திர வாழ்வைத் தொடரும் ஒருவன் , திடீரென அதிகாலை  ஐந்து மணிக்கு எழுந்து , சூரிய உதயத்தின் முன் அமைதியாக இருக்கும் தெருவில் , அந்த ஊசியாய் துளைக்காத வெது பனியில், மெல்ல நடந்து , அதன் இதமான குளிரில் , வீதியின் அழகை ரசிக்கும் போதே, குளித்த தலையுடன் துண்டை தலையில் கட்டி, கையில் மாவெடுத்து கோலமிடும் மகளிரை  ரசித்துக் கொண்டே விதிகளை விட்டு வெளிவந்து , வயல் பரப்புகளின் ஓரங்களின் நடக்கும் போது , கண்களுக்கு கிடைக்கும் பசுமையும் , அதன் குளுமையும், அதனையும் மீறி நம் பார்வையை கவரும் நாரை, காடை , குருவி , காகம் ஆகியவற்றின் குரல் இனிமை , பறவைகளுடன் நம்மையும் பறக்க செய்யும் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றவனாக , நான் கருத்தின்றி இதை எழுதும் போது , ஆனந்தம் கிடைக்கிறது என்படை உணர்ந்தேன்.
     
        கதையை எழுதுவதா? கதைக்குள் அடைப்பட்ட கருத்தை எழுதுவதா? கதை சொல்லும் சமூக விழிப்புணர்வை எழுதுவதா? சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கும் போலியான ஓட்டு முறையையும் , நட்பு என்ற முறையில் போடப்படும் போலியான விமர்சனத்தையும் , ஆஜர் அய்யாவையும் பற்றி எழுதுவதா? எல்லாவற்றையும் எல்லோரும்  எழுதி விட்டார்கள் ! எழுதாத ஒன்று எது ? என் நண்பன் ஸ்ரீ சொல்வான், ”எல்லாவற்றையும் எல்லாரும் எழுதிவிட்டார்கள் , ஆனால் , நீ எதை எழுத வேண்டும் என நினைத்தாலும் ,அதை எழுதும் முன் அதை வேறு யாரும் எழுதி விட்டார்களா ? என பார்த்துவிடு ,நிச்சயம் அது எழுதப்பட்டு இருக்கும் , ஆனால் , அதை வேறு ஆங்கிலில் யோசித்துப் பார், சொல்லும் முறையை , நடையை , உத்தியை , சொல்ல முயலும் தன்மையை .... அப்போது தான் நீ இலக்கிய உலகில் அறியப்படுவாய்”.  

    ஒன்று மட்டும் தெரிந்துக் கொண்டேன். நிறைய படிக்க வேண்டும். நிறைய படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நம்  மனம் கவரும் வகையில் எழுத முடியும். ஆம். ஒருவனுக்கு தன்னையே பிடிக்க வில்லையென்றால் , எப்படி பிறருக்கு பிடிக்கும் .  முதலில் எழுதும் எனக்கு பிடிக்க வேண்டும். அதற்கான முயற்சி தான்  சாருவையும், ராமகிருஷ்ணனையும் படித்துக் கொண்டு இருக்கிறேன். அவர்களின் இருள் நிரம்பிய பக்கங்களை பார்த்து வியப்படைந்துள்ளேன் .  இருள் சிலருக்கு பழகிய ஒன்று . சிலர் இருள் என்ற வார்த்தையை கேட்டாலே ஓடி ஒளிந்து விடுவர். இருளில் சர்பம் பார்த்து பயந்து ஓடிய எதிர்வீட்டுக் காரனால் , இன்றும் இருள் என்றால் பாம்பின் ஞாபகம் வந்து விடும்.  சாருவின் ஸீரோ டிகிரி படித்த பின் சர்ப்பம் வேறு அர்த்தம் பட்டது. அதற்காக மட்டமாக சிந்திக்க வேண்டாம். சாருவின் அழுத்தமான உணர்வு ரீதியான எழுத்தில் பாலியல் வன்மத்தை புதிய கட்டமைப்புடன் தந்திருக்கும் புதுமை வியக்க வைத்தது. அதே போல் எஸ். ரா. வின் உறுபசி வேகமான நடை, உணர்வு பூர்வமான பகிர்வாக அமைந்துள்ளது.   

     என் மனம் எதையாவது எழுதியே தீர்த்து விட வேண்டும் என துடித்து , துடித்து , இன்றைய வெகுஜன வார இதழ்களைப் போல இலங்கை உத்த களம் சார்பான கதைகளை , ஐ. நா . சபை இலங்கை ராணுவத்தின் கொடுமைகளை அம்பலப் படுத்தியதால் , பர பரப்புக்காக எழுதி தள்ளுவதா ? இருப்பினும் என் மனம் இவ் விசயத்தில் இருள் அடைந்ததால் , மீண்டும் இருள் மீதே என் பார்வையை திருப்புகிறேன். கால் கேட் விளம்பரம் போல பூதத்தை கண்டு பயப்படாத  மனிதன் உண்டா? என் மூத்த மகள் இருளில் மெழுகு வர்த்தி ஏற்றி , இருளில் நிழல் உருவத்தை ஏற்படுத்தி விளையாடும் பொது எனக்கு இருள் பிடிக்கும். இருளில் கொடிய மிருகங்கள் செய்து அதற்குரிய குரல் கொடுக்கும் போது , அவைகள் நமக்கு பிடித்துப் போகின்றன. ஆம், நிஜத்தில் பயப்படும் சில வியங்கள் நிழலாக தெரியும் போது பயமின்றி பிடித்து தான் போகின்றது.

    நண்பா எதையாவது எழுத வேண்டும் என்று எழுதி விட்டேன். தயவு செய்து ஏன் இது நாள் வரை எழுத வில்லை என்று மட்டும் கேட்டு விடாதே , நீ கேட்கவும் மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் இதை கூறுகின்றேன் . . சொல்லுவதா ? வேண்டாமா என்ற குழப்பமெல்லாம் இல்லை . நீ எனக்காக வருந்துவதை தவிர்க்கவும் விரும்ப வில்லை. இருப்பினும் நடந்து முடிந்த ஒன்றை பேசி பிரோஜனமில்லை.   நீயும் என்னைப் போல மனம் படைத்து என்னிடம் கேட்காமலும் இருந்திருக்கலாம். நல்லது . இது வரை எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் .  நம்பிக்கையில் தான் நாளை கடத்த முடியும் . நான் இப்போதெல்லாம் இருளில் நம்பிக்கையுடன் , அதன் உட்புகுந்து ஆந்தை கண்களால் , எழுதுவதற்கான இரை கிடைக்கிறதா என கூர்ந்து கவனிக்கிறேன்.  நண்பா , இருளில் நடக்க பழகிக் கொள் . வெளிச்சத்திற்கு பின் ஒளிந்துள்ள பல விசயங்கள் நமக்கு புலப்படும்.  

9 comments:

Rathnavel Natarajan said...

நிறைய படிக்க வேண்டும். நிறைய படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நம் மனம் கவரும் வகையில் எழுத முடியும்.
நல்ல பதிவு. உங்களை சுற்றியுள்ள சூழலே நிறைய விஷயங்கள் சொல்லும். கவனித்துப்பாருங்கள் (keenly observe).
வாழ்த்துக்கள்.

ADMIN said...

நல்லது.. குழப்பத்தில் கூட விடை தேடி வைத்துள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி சரவணன் அவர்களே..!

G.M Balasubramaniam said...

ஏதோ பிடித்த எழுத்தாளர்களை மட்டும் படிக்காமல் எல்லா வித எழுத்துக்களையும் படித்தால்தான் விருப்பு வெறுப்பின்றி விஷயங்களை அணுக முடியும். நலந்தானே.சரவணன்.?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ. ஒருவனுக்கு தன்னையே பிடிக்க வில்லையென்றால் , எப்படி பிறருக்கு பிடிக்கும் ஃஃஃஃ

ஆமாங்க மனதை உறுத்துது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நாம் எதைப் பற்றி எழுதப் போகிறோம் என்பதை பெரும்பாலும் சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. சில நேரங்களில் நமது உள் உணர்வும் அந்தப் பணியை செய்கின்றன. அடைப் பட்டு கிடக்கும் காற்று எப்படி வெளியே வந்து தீருமோ அப்படிதான் எழுத்தும். நமக்குள் மனதை வருடிக் கொண்டோ... அல்லது பிறாண்டிக் கொண்டோ இருக்கும் விஷயங்கள்தான் எழுத்தாக பிறக்கின்றன. எழுத்து இந்த பிரபஞ்சத்தில் எப்போதும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அடி பம்புபோல் நாம் அடிக்கும்போது....' எழுத்து' எழுந்து வருகிறது.

நான் கூட இப்படிதான், வலுகட்டாயமாக எழுத வேண்டும் என்று உட்கார்ந்து நல்ல (?) கவிதைகளை படைத்துள்ளேன்.
வாழ்த்துகள் சரவணன்!.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

வாசிப்பின் சுகானுபவத்தை உணர்ந்துள்ளீர்கள். படிப்பு, படைப்புக்கு வழிகோலும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இருளில் பிறர் கண்ணுக்குப்புலப்படாத பல புதிய விஷயங்கள் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். அவற்றைப் பகிருங்கள். புதுமையாக வரவேற்கப்படும். வாழ்த்துக்கள்.

மோகன்ஜி said...

உங்கள் பதிவுகளின் பலமே உங்கள் எளிமையான, ஆரவாரமில்லாத தமிழ் தான். தொடர்ந்து கலக்குங்க சார்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

இடைவெளிக்கு பின் ஆரம்பமே அதிரடி தான்.

Post a Comment